×

கோவிந்தா... கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: கொரோனா விதிகளை கடைப்பிடித்து பக்தர்கள் சாமி தரிசனம்

சென்னை: கோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 108 வைணவ தலங்களில் மிகவும் பிரசித்தி  பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் ராபத்து உற்சவம் என்று கூறப்படும், சொர்க்கவாசல்  திறக்கும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக, நடைபெற்று வருகிறது. இந்தாண்டு  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் கடந்த 3ம் தேதி  தொடங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி திருவீதி உலா நடந்தது. இந்த  நிலையில் ராபத்து முதல் நாளான நேற்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டன.

இதையொட்டி அதிகாலை 3 மணியளவில் இருந்து 4 மணி வரையில் விஸ்வரூபம்,  அலங்காரம் மற்றும் தனூர் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 4 மணி முதல் 4.15 மணி வரை மகா மண்டபத்தில் இருந்து உற்சவர் வைர அங்கி சேவையில் காட்சியளித்தார். தொடர்ந்து 4.16 மணிக்கு  உற்சவர் மகா மண்டபத்தில் இருந்து உள்பிரகாரம் வழியாக வலம் வந்து அதிகாலை  4.30 மணிக்கு சொர்க்கவாசல் வந்தடைந்தார். பின்னர் 4.30 மணிக்கு  சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, எதிரே எழுந்தருளியிருக்கும் நம்மாழ்வாருக்கு காட்சி தந்தார். இந்த முறை சொர்க்கவாசல் திறப்பை காண பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கோயில்களின் மாட வீதியில் வைக்கப்பட்டிருந்த எல்இடி திரையில் பக்தர்கள் சொர்க்கவாசல் திறப்பை  பக்தர்கள் கண்டுகளித்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா  என பக்தியுடன் முழக்கிமிட்டனர்.

இதை தொடர்ந்து, வேதம் தமிழ் செய்த மாறன், மாறன்  சடகோபன், நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யும் விதமாக, ஏகதிவ்ய பிரபந்தம்  தொடங்கியது. இதையடுத்து காலை 6.15 மணி முதல் இரவு 8 மணி வரை வரை திருவாய் மொழி மேல் மண்டபத்தில் உள்ள புண்ணியகோடி மண்டபத்தில் வைர அங்கியுடன் உற்சவர் எழுந்தருளினார். முன்னதாக சொர்க்கவாசல் திறக்கப்பட்டதை ஒட்டி, அதிகாலை 4 மணி முதலே கடும் குளிரையும்  பொருட்படுத்தாமல் கோயிலுக்கு வெளியே பக்தர்கள் காத்திருந்தனர். காலையில் 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை அரசால் வெளியிடப்பட்டுள்ள கோவிட் 19 நோய் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வசதிக்காக சென்னை மாநகராட்சி மூலம் கூடுதலாக இலவச கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. கோயிலின் உள்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், மாட வீதிகளில் சென்னை குடிநீர் வாரியத்தின்மூலம் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், கோயிலின் உட்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் கண்காணிக்க 32 இடங்களில் அமைக்கப்பட்டு, கோயிலின் உட்பகுதியிலும், காவல் துறை கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்பட்டன. கோயில் வளாகத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். இதே போன்று மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில், கேசவ பெருமாள் கோயில், தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில், புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோயில், சவுகார் பேட்டை தாமோதர பெருமாள் கோயில் உட்பட சென்னையில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பை ஓட்டி ஏராளானோர் தங்களது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Govinda ,Kosham ,Thiruvallickeni Parthasarathi Temple ,Corona ,Sami , Govinda, Tiruvallikeni, Parthasarathy Temple, Heaven Gate Opening, Corona Rule,
× RELATED பாத தரிசனத்தின் பலன் என்ன?